நான் கடவுள் படத்தை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்தப் படத்துக்கு எதிராக ஒரு குரல். பாலா நான் கடவுளில் ஊனமுற்றோரை இழிவுப்படுத்தி விட்டார் என்று.
இப்படி அதிர்ச்சியான குரல் கொடுத்திருப்பவர்கள் தமிழ்நாடு ஊனமுற்றோர் நலவாரியத்தின் உறுப்பினர்கள். இவர்கள் நான் கடவுள் படத்துக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.
ஊனமுற்றவர்கள் பிச்சைக்காரர்களாக காட்டப்பட்டிருக்கிறார்கள். கண் தெரியாத பூஜாவை குருடி என்கிறார்கள். தாண்டவன் ஊனமுற்றவர்களை அடித்து சித்திரவதை செய்து பிச்சையெடுக்க வைக்கிறான். சித்திரவதை தாங்காத பூஜா தனது உயிரை மாய்ப்பதென முடிவெடுக்கிறார். இவையே அவர்களின் குற்றச்சாட்டு.
ஊனமுற்றவர்கள் பிச்சையெடுக்க நிர்ப்பந்திக்கப்படுவது இன்றும் கண்கூடாக நடந்து வருகிறது. அதனையே பாலா திரைப்படமாக்கியுள்ளார். கண் தெரியாதவர்களை குருடி என்று இந்த சமூதாயம் கேலி செய்வதும் நாம் அறிந்ததே.
தாண்டவன் ஊனமுற்றவர்களை சித்திரவதை செய்வது பாலாவின் விருப்பத்தினால் அல்ல. அப்படிதான் இந்த சமூகத்தில் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள் பலரும் சித்திரவதைக்குள்ளாகிறார்கள். ஆக, இவர்களின் குற்றச்சாட்டில் எந்த அர்த்தமும் இல்லை, ஒன்றே ஒன்றை தவிர்த்து.
பூஜா தன்னைத்தானே அழித்துக் கொள்ள முடிவெடுப்பது தவறான முன்னுதாரணமாகலாம் என்று குறிப்பிட்டுள்ளனர். ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து.
படத்தில் இடம்பெறும் மேற்சொன்ன காட்சிகளை நீக்க வேண்டும், பாலா மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது அவர்களின் டிமாண்ட். இல்லாவிடில் வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
உறுப்பினர்களுக்கு உடனடி தேவை பாலாவின் மன்னிப்பல்ல. ஒரு படத்தை எப்படி பார்க்க வேண்டும் என்ற அறிவும், தெளிவும்.