நயன்தாரா தமிழ்ப் படங்களில் நடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையின் விதிகளுக்கு கட்டுப்பட அவர் மறுத்ததால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
webdunia photo
WD
லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் தயாரிக்கும் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ஒரு கோடியே பத்து லட்சம் சம்பளம் பேசப்பட்டு அடவான்ஸும் கொடுக்கப்பட்டது. லிங்குசாமி இயக்கும் இந்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிப்பதாக முடிவானது.
ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு முடிவடையாததால் லிங்குசாமியின் படம் தள்ளிப்போனது. இதனால் நயன்தாராவின் கால்ஷீட்கள் வீணாயின. இந்நிலையில் நயன்தாராவுக்கு பேசப்பட்ட சம்பளம் அதிகம் என்று கூறி, அதை குறைத்துக் கொள்ளும்படி தயாரிப்பாளர் தரப்பிலிருந்து நயன்தாராவிடம் கேட்கப்பட்டது. இதற்கு நயன்தாரா சம்மதிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் நயன்தாரா. அவருக்குப் பதில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.
தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் கூட்டாக ஏற்படுத்தியிருக்கும் விதியின்படி, ஒரு நடிகர் அட்வான்ஸ் வாங்கிவிட்டு ஒரு நாளாவது படப்பிடிப்பில் கலந்து கொண்டால் அட்வான்ஸை திருப்பித்தரத் தேவையில்லை. நயன்தாரா ஒருநாள் கூட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. விதிமுறையின்படி அவர் வாங்கிய அடவான்ஸை திருப்பித்தர வேண்டும். இந்த விதிமுறையை அவரிடம் சொன்ன பிறகும் அவர் அட்வான்ஸை திருப்பித்தரவில்லை.
அதனால், இரு சங்கங்களின் கலந்தாய்வு கூட்டத்தில் நயன்தாரா தமிழ்ப் படங்களில் நடிக்க தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பிற மொழி தயாரிப்பாளர்களின் படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யாமல் இருக்க அந்தந்த தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மலையாளத்தில் சித்திக்கின் பாடிகாட் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.