யாரும் இதுவரை சொல்லாத புதிய கதை. படத்தை தொடங்கும் போது அனைவரும் தவறாமல் சொல்லும் ஸ்லோகம் இது. இதையே படத்தின் டைட்டிலாக்கி இருக்கிறார், இயக்குனர் ஆர். வேணு.
இவர் முதன்முறையாக இயக்கப் போகும் படத்துக்கு வைத்திருக்கும் பெயர், புது கதை. பெயருக்கேற்ற மாதிரி படத்தில் மூன்று புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கூடவே சில பழைய முகங்கள். ரம்பா, சமிக்சா, நாசர்...
அப்படி என்ன புதிய கதை சொல்லப் போகிறார்கள்?
பணம் சம்பாதிக்க எதற்கும் தயாராக இருக்கும் மூவர். அவர்களை வைத்து காரியம் சாதிக்க பார்க்கிறார் வசதி படைத்த மனிதர் ஒருவர். காரியம் என்றால், அவரை அந்த மூவரும் கொலை செய்ய வேண்டும். இதுவரை பார்த்த படங்களில் அடுத்தவரை கொலை செய்யதான் பணம் கொடுப்பார்கள். இதில் தன்னை கொலை செய்ய பணம் தர முன்வருகிறார் அந்த வசதி படைத்தவர். மூவரும் ஒத்துக் கொள்கிறார்கள்.
எதிர்பாராத விதமாக அவர்கள் கொலை செய்யப் போகும்போது, அவர்களுக்கு முன்பே யாரோ அவரை கொலை செய்து விடுகிறார்கள். கொலைப்பழி மூவர் மீதும் விழுகிறது. உண்மையில் அவரை கொன்றவர்கள் யார்? கொலைப் பழியிலிருந்து அந்த மூவரும் தப்பித்தார்களா? விறுவிறுப்பாக பதில் சொல்கிறது புது கதை.
க்ரைம் த்ரில்லரான இதில் ரம்பாவுக்கு முக்கியமான வேடமாம். ஏறக்குறைய கதாநாயகி மாதிரி. ம்... இதுவும் புதிய கதையாகத்தான் இருக்கிறது.