கடந்த 2007ல் தொடங்கிய படம். இன்னும் திரைக்கு வராமல் இழுத்துக் கொண்டிருக்கிறது. பாலாவே நான் கடவுளை முடித்துவிட்டார். அப்படியிருக்க ஆனந்த தாண்டவத்துக்கு ஏன் இத்தனை தாமதம் என்று ரசிகர்களே கேட்க தொடங்கிவிட்டனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஆனந்த தாண்டவத்தின் இயக்குனர் காந்தி கிருஷ்ணா.
புதுமுகம் சித்தார்த், தமன்னா, ருக்மணி நடித்திருக்கும் ஆனந்த தாண்டவம் மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய பிரிவோம் சந்திப்போம் நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாராகியிருக்கிறது. பிரிவோம் சந்திப்போம் பெயரை கரு.பழனியப்பன் தனது படத்துக்கு வைத்துக் கொண்டதால் காந்தி கிருஷ்ணாவின் படம் ஆனந்த தாண்டவமாக மாறியது.
படத்தின் பெரும்பகுதி அமெரிக்காவில் படமாக்கப்பட்டுள்ளது. இதுவரை கேமரா கண்கள் பதியாத இடங்களை தேடித் தேடி படமாக்கியிருக்கிறார் காந்தி கிருஷ்ணா. மேலும், அமேரிக்கா செல்ல பாஸ்போர்ட், விசா பிரச்சனைகள் இருந்ததால் குறித்த நேரத்தில் தாண்டவத்தை முடித்துக் கொள்ள இயலவில்லையாம். அதுதான் தாமதத்திற்கு காரணம்.
படம் தற்போது முடிந்துவிட்ட நிலையில் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஆனந்த தாண்டவத்தை தயரித்துள்ளார்.