தமிழில் அறிமுகமாகும் பத்து நாயகிகளில் எட்டு பேர் மலையாளிகள். மீதி இரண்டு பேர் மும்பை வரவு. கொஞ்ச நாட்களாக தமிழ் சினிமாவின் நிலை இப்படித்தான் இருக்கிறது. தேசம் மாறினாலும் இவர்கள் யாருக்கும் தமிழில் ஆனா ஆவன்னா தெரியாது என்பது பொது ஒற்றுமை.
இப்படியான கசப்பான சூழலில் இனிப்பான மிட்டாயாக வந்திருக்கிறார், கரோலின். ரயிலு படத்தின் நாயகி. பீஷ்மர், பசுபதி மே.பா ராசக்காபாளையம் படங்களை எடுத்த ரஞ்சித்தின் புதிய படம் ரயிலு. இந்தமுறை படத்தை தயாரித்து கையை சுட்டுக் கொள்ளாமல் இயக்கத்தை மட்டும் கவனிக்கிறார்.
ரயிலு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அழகு தமிழில் பேசி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் கரோலின். ஆங்கிலோ இந்தியனாக இருந்தாலும் மாடலிங் செய்தது சென்னையில் என்பதால் கரோலினுக்கு தமிழ் தண்ணிபட்டபாடாம்.
மலையாளத்தில் லோகிததாஸ் இயக்கிய சல்லாபம் படத்தின் ரீ-மேக்தான் ரயிலு. படத்தை இயக்குவதுடன் நாயகனாகவும் நடிக்கிறார் ரஞ்சித்.