புதிய வருடத்தின் முதல் வாரம் சிம்புவின் சிலம்பாட்டம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. டாப் 5 படங்களின் பட்டியலில் சூர்யாவின் வாரணம் ஆயிரம் தொடர்ந்து இடம்பெற்றிருப்பதும் சாதனைதான்.
5. வாரணம் ஆயிரம் சூர்யாவின் சின்சியர் நடிப்பில் உருவான இந்தப் படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தந்தை, மகன் பாசத்தை பின்னணியாகக் கொண்ட படம் என்பதால் குடும்பங்களின் ஆதரவும் இப்படத்துக்கு உள்ளது. சென்ற வார இறுதியில் சென்னையில் மட்டும் ரூ.3,92,187 வசூலித்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
4. பஞ்சாமிர்தம் புராண கதாபாத்திரங்களை நிகழ்காலத்தில் உலவவிட்ட ராஜு ஈஸ்வரனின் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே சராசரியான வரவேற்பே கிடைத்துள்ளது. குழந்தைகள்தான் இப்படத்தின் பெரும்பான்மை பார்வையாளர்கள். சென்ற வாரம் சென்னையில் இப்படம் வசூல் செய்தது, ஏறக்குறைய ஆறரை லட்சங்கள்.
3. திண்டுக்கல் சாரதி கருணாஸை வெற்றிகரமான ஹீரோவாக்கியிருக்கும் படம். காமெடியும், சென்டிமெண்டும் சரிவிகிதத்தில் கலந்த இந்தப் படத்தின் பெரும் பலம் சன் பிக்சர்ஸின் விளம்பரம். இதுவரை சென்னையில் 48 லட்சங்கள் வசூலித்திருக்கும் இப்படத்தின் சென்ற வார வசூல், 9.84 லட்சங்கள்.
2. அபியும் நானும் கதை, திரைக்கதை, நடிப்பு, வசனம், இயக்கம் என அனைத்திலும் மற்ற படங்களை பின்னுக்கு தள்ளும் ராதாமோகனின் இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகியிருந்தால் நமது ரசனையை மெச்சியிருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக சராசரி வசூலே இந்தப் படத்துக்கு கிடைத்து வருகிறது. சென்ற வார இதன் சென்னை வசூல் 12.75 லட்சங்கள் மட்டுமே.
1. சிலம்பாட்டம் சிலம்பாட்டத்தின் வேர் இஸ் தி பார்ட்டி டு நைட் பாடல் ஒலிக்காத இடங்களில்லை. ஆபாசமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை மீறி தொடர்ந்து முதலிடத்தில் உள்ள இப்படத்தின் சென்றவார வசூல், 28 லட்சங்களுக்கும் மேல். சென்னையில் மட்டும் இரண்டு கோடியை தாண்டி வசூலித்திருப்பது ஆச்சரியமான நிகழ்வு.