இந்தியில் வெளியான ஏ.ஆர். முருகதாஸின் கஜினி பாலிவுட்டின் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து, சரித்திரம் படைத்து வருகிறது.
அமீர்கான் நடிப்பில் கிறிஸ்துமஸ் அன்று வெளியான இப்படம் முதல் 12 நாட்களில் அதாவது ஜனவரி 4ம் தேதி வரை 81 கோடிகள் வசூலித்துள்ளது. இது எந்த இந்திப் படமும் இதுவரை செய்யாத சாதனை.
காதல் மற்றும் இசை சம்பந்தமான இந்திய படங்களுக்கே சர்வதேச மார்க்கெட்டில் வரவேற்பு உண்டு என்ற பழைய நம்பிக்கையையும் உடைத்திருக்கிறது, கஜினி. யு.கே., யு.எஸ்., ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் ஆக்சன் படமான கஜினி அபிரிதமான வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த மெகா ஹிட்டால் மகிழ்ச்சியில் இருக்கும் முருகதாஸ் தனது அடுத்தப் படத்தையும் இந்தியில் இயக்குவது என்று முடிவு செய்துள்ளார். தமிழ்த் திரையுலகம் குறிப்பாக உதவி இயக்குனர்கள் முருகதாஸின் வெற்றியை தங்களது வெற்றியைப்போல் கொண்டாடுகிறார்கள்.
படத்தின் ஸ்டோரி டிஸ்கஷனுக்கு உதவி இயக்குனர்களை கழற்றிவிட்டு வெளிநாடு பறக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் தனது அனைத்து உதவி இயக்குனர்களையும் கஜினி கதை விவாதத்துக்காக கலிஃபோர்னியா அழைத்து சென்றவர் இயக்குனர் முருகதாஸ்.