இயக்குனர்களுக்கு புதிய கட்டுப்பாடு

செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:14 IST)
ஒளிமயமான எதிர்காலம் உதவி இயக்குனர்களின் வாழ்வில் தெ‌ரியத் தொடங்கியிருக்கிறது. ஒரு படத்தின் பிள்ளையார் சுழி முதல் பூசணிக்காய் உடைப்பு வரை உடனிருப்பவர்கள் உதவி இயக்குனர்கள். பட உருவாக்கத்தில் ூணாக இருக்கும் இவர்களுக்கு துரும்பளவிற்குகூட சில நேரங்களில் சம்பளம் கிடைப்பதில்லை. இந்த நிலை புது வருடத்தில் மாறுவதற்கான அறிகுறி தெ‌ரிகிறது.

நேற்று இயக்குனர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்று, உதவி இயக்குனர்களுக்கான சம்பளத்தை சங்கம் வழியாக பெற்றுத் தருவது. இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் உதவி இயக்குனர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்திற்கான உத்தரவாதமாவது கிடைக்கும்.

உதவி இயக்குனர்களுக்கு சம்பளம் கிடைக்காமல் இருப்பதற்கு பல நேரம் இயக்குனர்களே காரணமாக இருந்துள்ளனர். இதனையும் சங்கம் கவனத்தில் கொண்டால், ஒளிமயமான எதிர்காலம் உறுதி.

நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட இன்னொரு முக்கியமான தீர்மானம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் மட்டுமே தமிழில் படம் இயக்க முடியும். இந்த தீர்மானம் உடனடியாக அமலுக்கு வருவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.கே. செல்வமணி தெ‌ரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்