பா‌க்‌ஸ் ஆஃ‌‌பி‌ஸ் டாப் 5 படங்கள்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:00 IST)
இன்றைய தேதியில் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் படங்கள் எவை? சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை வைத்து தொகுக்கப்பட்ட பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

1. வாரணம் ஆயிரம்

தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் இருக்கிறது கௌதமின் இந்தப் படம். சூர்யாவின் பலதரப்பட்ட நடிப்பை ஒரே படத்தில் பார்க்க தகுந்த படம் இது. ஹாரிஸின் இசையும், சூர்யா, சமீரா ரெட்டி காதலும் இளசுகளை பரவசப்படுத்தும். சென்னையில் இதுவரை ஏறக்குறைய ஐந்து கோடி வசூலித்து இந்த வருடப் படங்களில் தசாவதாரத்துக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது இந்தப் படம்.

2. பொம்மலாட்டம்

சென்றவார சென்னை வசூலில் பாரதிராஜாவின் பொம்மலாட்டத்துக்கு இரண்டாவது இடம். நானா படேக‌ரின் அற்புதமான நடிப்பு பொம்மலாட்டத்தின் ரசிக்க வைக்கும் அம்சம். கால ஓட்டத்தில் தான் பின் தங்கிவிடவில்லை என்பதை இந்தப் படம் மூலம் இளைய தலைமுறைக்கு உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் இமயம். ருக்மணியின் நடிப்பும், கண்ணனின் ஒளிப்பதிவும் படத்தின் சொல்லத்தகுந்த பிற விஷயங்கள்.

3. தெனாவட்டு

வி.வி. கி‌ரியின் இந்த கமர்ஷியல் ஹிட்டுக்கு சன் தொலைக்காட்சியின் தெவிட்டும் விளம்பரம் முக்கிய காரணம். ‌‌ஜீவாவின் கதாபாத்திரம் திருப்பாச்சி விஜயை பல நேரம் பிரதிபலிக்கிறது. பாடல்கள் கேட்கும்படி இருப்பது ஆறுதல். மதுரையிலிருந்து கிளம்பிவரும் வெள்ளந்தி மனிதர்கள் இன்னும் எத்தனை நாளைக்கு சென்னை ரவுடிகளை கொன்றொழிப்பார்கள்? தெனாவட்டு 85 லட்சங்கள் வசூலித்து மூன்றாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.

4. பூ

மோசர் பேர் தயா‌ரித்த வெள்ளித்திரை, ராமன் தேடிய சீதை, பூ என அனைத்துமே தரமான படங்கள். ஆனால் படத்தின் வசூல் அத்தனை தரமாக இல்லாதது, சோகம். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுத்திருக்கும் சசி பாராட்டுக்கு‌ரியவர். பார்வதி தமிழுக்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு நல்ல நடிகை. சென்னையில் சசியின் இப்படம் இதுவரை 41 லட்சங்கள் மட்டுமே வசூலித்துள்ளது தமிழர்களின் ரசனை குறைபாடு. வசூல் அடிப்படையில் பூ-வுக்கு நான்காவது இடம்.

5. சூர்யா

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் தனது மகன் விஜய சிரஞ்சீவியை கதாநாயகனாக்கியிருக்கும் படம் சூர்யா. சினிமாவில் வில்லனாக நடிக்க சென்னை வரும் சூர்யா, வில்லன்களுடன் மோதி நிஜ ஹீரோவாகிறார். படத்தில் மொத்தம் பதினொரு சண்டைகள். தற்காப்பு கலையை கற்ற அளவுக்கு சூர்யா நடிப்பை கற்றுக் கொள்ளாதது படத்தின் மைனஸ்களில் ஒன்று. சென்னை பாக்ஸ் ஆபிஸில் ஜாக்குவார் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஐந்தாவது இடம்.

வெப்துனியாவைப் படிக்கவும்