சில மாதங்களுக்கு முன் அடிதடி காரணமாக நின்றுபோன இயக்குனர்கள் சங்க தேர்தல் நாளை நடைபெறுகிறது.
சங்க நிர்வாகிகளின் பதவிகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து இயக்குனர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. தலைவர் பதவிக்கு பாரதிராஜாவை போட்டியின்றி தேர்ந்தெடுக்க நடந்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. இயக்குனர் ஆர்.சி.சக்தி பாரதிராஜாவுக்கு எதிராக தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
தேர்தல் நெருங்கும் சமயம் பாரதிராஜா ஆதரவு இயக்குனர்கள் தன்னை மிரட்டியதாக புகார் செய்தார் சக்தி. மேலும், உதவி இயக்குனர்கள் தனி அணியாக பிரிந்து, நாளைய இயக்குனர்கள் அணி என்ற பெயரில் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தனர். இந்த குழப்பத்திற்கு நடுவில் தேர்தலுக்கு முதல்நாள் இரவு பந்தல் வேலையில் ஈடுபட்டிருந்த இயக்குனர்களை சிலர் தாக்கினர். இதனைத் தொடர்ந்து தேர்தல் மறு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
தேர்தல் தேதியை முடிவு செய்ய நடத்தப்பட்ட கூட்டத்தில் தேதியை முடிவு செய்யாமல், பாரதிராஜாவை ஒரு மனதாக தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுத்ததாக அறிவித்தனர். இதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் சக்தி. வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிராஜாவை தேர்ந்தெடுத்தது செல்லாது என அறிவித்தார்.
இந்த நீண்ட குழப்பத்திற்குப் பிறகு மீண்டும் நாளை தேர்தல் நடைபெறுகிறது. பாரதிராஜாவை எதிர்த்து ஆர்.சி.சக்தி, ஜாக்கிராஜ் போட்டியிடுகின்றனர். உதவி இயக்குனர்களின் நாளைய இயக்குனர்கள் அணியும் களத்தில் உள்ளது.
பிலிம் சேம்பரில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நாளை மாலையே தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.