ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் சித்திக் மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
சித்திக், இயக்குனர் பாசிலின் சீடர். சண்டகோழி, மருதமலை படங்களில் வில்லனாக நடித்த லால் இவரது நண்பர். இவர்கள் இருவரும் இணைந்தே படங்களை இயக்கி வந்தனர். சித்திக் - லால் இயக்கத்தில் வெளிவந்த அனைத்துப் படங்களும் வெற்றிபெற்றது ஒரு சாதனை.
லால், படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு சித்திக் தனியாக படங்களை இயக்க ஆரம்பித்தார். இவர் இதுவரை இயக்கிய அனைத்துப் படங்களின் பெயரும் ஆங்கிலப் பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விதிவிலக்காக ஒரு இந்திப் பெயர், காபுள்ளிவாலா.
சித்திக் - லால் இணைந்து இயக்கிய ராம்ஜிராவ் ஸ்பீக்கிங், அரங்கேற்றவேளை என்ற பெயரிலும், காபுள்ளிவாலா, மீசைமாதவன் என்ற பெயரிலும், இன் ஹரிஹர் நகர், எம்.ஜி.ஆர் நகரில் என்ற பெயரிலும் ஹிட்லர் தி கிரேட், மிலிட்டரி என்ற பெயரிலும், தமிழில் ரீ மேக் செய்யப்பட்டிருக்கிறது.
க்ரோனிக் பேச்சிலர் படத்தை சித்திக்கே எங்கள் அண்ணா என்ற பெயரில் ரீ மேக் செய்தார். மலையாள ப்ரண்ட்ஸ் அதே பெயரில் தமிழில் ரீ மேக் செய்யப்பட்டது. இவர் இயக்கிய ஒரே நேரடி தமிழ்ப் படம் சாது மிரண்டா.
மலையாளத்தில் திலீப் நடிக்கும் பாடிகார்ட் படத்தை இயக்க உள்ளார் சித்திக். இதே கதையை தமிழில் விஜய்யை வைத்து இயக்குகிறார், சித்திக். விஜய் கதை கேட்டு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார். ஆனாலும், மலையாளப்படம் வெற்றிபெற்றால் மட்டுமே அந்த கதையில் நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.
சித்திக் இயக்கும் படம் விஜய்யின் ஐம்பதாவது படமாக இருக்கும்.