அமெரிக்க இயக்குனரின் எதிர்மறை!

புதன், 7 ஜனவரி 2009 (21:30 IST)
அமெரிக்காவில் சினிமா குறித்து படித்த அருண் என்பவர் தமிழ்நாட்டில் படம் பண்ண வந்துள்ளார். அவரின் மொழிப் பற்றுக்கு முதலில் ஒரு சலாம்.

படத்துக்கு எதிர்மறை என நெகட்டிவாக தலைப்பு வைத்ததிலிருந்து அவரது துணிச்சலை ஓரளவு புரிந்து கொள்ளலாம். தமிழில் முதல்முறையாக ஹாலிவுட்டின் லேட்டஸ்ட் வரவான ரெட் கேமராவை இந்தப் படத்துக்காக சொந்தமாக வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

இளையராஜா, யுவன் ­சங்கர் ராஜா ஆகியோரிடம் கீ போர்ட் ப்ளேயராக இருக்கும் முருகன் படத்துக்கு இசை. இவர் பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராமின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய வரவான ரெட் கேமராவை இயக்கத் தெரிந்தவர்கள் இந்தியாவில் வெகு சிலரே உள்ளனர். அதில் ஒருவர் சத்தம் போடாதே படத்தின் கேமராமேன் தினேஷ் குமார். எதிர்மறை படத்திற்கு இவரே ஒளிப்பதிவு செய்கிறார்.

த்ரில்லர் படமான இதன் கதை ஒரு வீட்டிற்குள் நடப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரசாத் ஸ்டுடியோவில் இரண்டு மாடி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை 50 லட்ச ருபாயில் அமைத்துள்ளனர்.

அருண் தயாரித்து இயக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் அஜய், பானு நடிக்கின்றனர். ஒரு பாடல் காட்சிக்காக அமெரிக்கா செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு பிரசாத் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்