இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமினில் வெளியே வந்திருக்கிறார் அமீர். இந்த கைது நடவடிக்கைக்குப் பிறகு அமீரின் சினிமா வானில் நிறைய அரசியல் மேகங்கள்.
ம.தி.மு.க. தலைவர் வைகோ அமீர், சீமான் இருவரையும் நேரில் சென்று சந்தித்து நீண்ட நேரம் பேசினார். கைதுக்குப் பின் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி பகுதிகளில் அமீர் பெயரில் தொடங்கப்பட்ட அறப்பணி மன்றங்களின் நிர்வாகிகளும் அமீரை சந்தித்து அரசியல் பிரவேசத்தை வலியுறுத்தி உள்ளனர்.
இந்த வாரம் விஜயகாந்தை சந்திக்க இருக்கிறார் அமீர். இதனை உறுதி செய்த அமீர், இறையாண்மைக்கு எதிராக பேசியதாக, என்னை கைது செய்ய காங்கிரசார் கூப்பாடு போட்டனர். அவர்கள் மனசாட்சிக்கு, நான் அப்படி எதுவும் பேசவில்லை என்பது தெரியும். அந்த கோபம்தான் என்னை அரசியல் பக்கம் இழுத்திருக்கிறது என்றார்.
அமீரின் குடும்பம் காங்கிரஸ் சார்புடையது. அமீர் மட்டும் தி.மு.க. அனுதாபி. தி.மு.க. அரசு அவரை கைது செய்துள்ள நிலையில் அவர் எந்த கட்சியை ஆதரிப்பார்?
இந்த கேள்வி ஒருபுறம் இருக்க, நீங்கள் கலைஞன், அரசியல் உங்களுக்குத் தேவையில்லை என அமீரை வற்புறுத்தி வருகிறார்கள் அவரது நண்பர்கள்.
அரசியலா? சினிமாவா? தற்போது அமீரை ஆட்டிப் படைக்கும் இது. விஜயகாந்துடனான சந்திப்பு இதற்கு விடை சொன்னால் நல்லது.