நடிகர்களுக்கு திடீர் கட்டுப்பாடு!

புதன், 29 அக்டோபர் 2008 (13:19 IST)
நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் நடிகர்கள் பேசுவதற்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறது நடிகர் ச‌ங்கம்.

இல‌ங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், அதனை நிறுத்த கோ‌ரியும் ராமேஸ்வரத்தில் திரையுலகினர் பேரணியும், பொதுக் கூட்டமும் நடத்தினர். ராமேஸ்வரம் அதிக தூரம் என்று கூறிய நடிகர் ச‌ங்கம் நவ. ஓன்றாம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தது.

இந்நிலையில் ராமேஸ்வரம் பொதுக் கூட்டத்தில் இயக்குனர்கள் சீமான், அமீர் இருவரும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகக் கூறி தமிழக அரசு அவர்களை சிறையிலடைத்தது. மேலும் மத்திய அரசை தமிழக அரசு எவ்விதத்திலும் நிர்ப்பந்திக்காது என்று கூறி தமிழ் உணர்வை முற்றிலுமாக தமிழக அரசு கைகழுவியிருக்கிறது.

உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள நடிகர், நடிகைகளுக்கு அழைப்பிதழ் அனுப்பியிருக்கும் நடிகர் ச‌ங்க‌த் தலைவர் சரத்குமார், உண்ணாவிரதத்தின் போது தமிழக, மத்திய மற்றும் இல‌‌ங்கை அரசுகளுக்கு எதிராகவோ, சட்டவிரோதமாகவோ, யார் மனதும் புண்படும்படியோ பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். த‌ங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் கருத்துக்களை மட்டும் பதிவு செய்தால் போதும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

திரையில் உலகை காப்பாற்றும் ஹீரோக்களின் நிஜ முகத்தை வெளிப்படுத்தியதற்கு சரத்குமாரை எத்தனை பாராட்டினாலும் தகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்