நானும், அமீரும் பேசியதால் நாடு சுக்குநூறாகிவிட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குனர் சீமான்.
ராமேஸ்வரம் பொதுக் கூட்டத்தில் இயக்குனர்கள் சீமானும், அமீரும் பேசிய ஈழத் தமிழர் ஆதரவு கருத்துக்காக இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸை சேர்ந்த சில குட்டி தலைவர்களும், ஜெயலலிதாவும் கூறி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு பதிலளிப்பது போல் பேசியிருக்கிறார் சீமான்.
விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் இல்லை என்று 86 சதவீத மக்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அரசையே மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். புலிகள் எப்படிபட்டவர்கள் என்று மக்கள் சொல்வார்கள். அதனை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தீர்மானிக்கக் கூடாது.
விடுதலைப் புலிகளை தேவையில்லாமல் இந்தியாவில் தடை செய்திருக்கிறார்கள் என்று பால் தாக்கரே கூறியிருக்கிறார். அவரை ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவித்தார் என கண்டிக்க முடியுமா? கண்டித்தால் மராட்டியம் மண் மேடாகும்.
தமிழக மீனவர்கள் 400 பேரை சிங்கள கடற்படை சுட்டுக் கொன்று நாட்டையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதை கண்டிக்க துப்பில்லை. நானும், அமீரும் பேசியதால் நாடு சுக்கு நூறாகிவிட்டதா?
தமிழக மீனவர்கள் செத்து விழுவதை பேரியக்கம் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் இதுவரை கண்டித்திருக்கிறார்களா?
இவ்வாறு பேசியிருக்கும் சீமான், புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமல்ல, அவர்கள் மீதான தடையை விலக்குங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.