உலகம் முழுவதும் ஓடி ஓடி படம் எடுத்தால்தான் அது உலக சினிமா என்று நினைத்துவிட்டாரா இயக்குனர் ஜெகன்நாத்? இவரது அடுத்தப் படத்தை ஐந்து மாநிலங்களில் எடுக்கப் போகிறாராம்.
புதிய கீதை, கோடம்பாக்கம் என்ற இரண்டு தோல்விகளுக்குப் பிறகு ஜெகன்நாத்துக்கு கிடைத்த வெற்றி ராமன் தேடிய சீதை. கமர்ஷியலா படம் சுமார்தான் என்றாலும் நாகரிகமான படம் தந்ததற்கு விமர்சகர்களின் பாராட்டை பெற்றார் ஜெகன்நாத். இப்போது அவர் விடுத்திருக்கும் ஸ்டேட்மெண்ட்தான் கவலைப்பட வைத்துள்ளது.
வங்காள மொழியில்தான் சிறந்த படங்கள் வருவதாக சொல்கிறார்கள். வங்காளம் என்ன, உலகமே திரும்பிப் பார்க்கும் படத்தை அடுத்து எடுக்கப் போகிறேன் என்றவர், ராமன் தேடிய சீதை போல் ஐந்து ஹீரோயின்களை இதிலும் நடிக்க வைக்கப் போகிறாராம்.
அதுமட்டுமா? முந்தைய படம் சென்னையில் தொடங்கி நாகர்கோவிலில் முடிந்தது என்றால், அடுத்தப் படத்தை பல்வேறு மாநிலங்களில் எடுக்க இருக்கிறாராம்.
உலகம் முழுவதும் பாராட்டு பெறத்தான் இந்த முயற்சியாம். பசுபதி நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது.