கசப்பு மருந்துதான், கண்ணை மூடிக் கொண்டு குடித்தால் திருட்டு வி.சி.டி. என்ற அரக்கனை ஒழித்துவிடலாம். கசப்பு மருந்தை பரிந்துரைத்திருப்பவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர்.
சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாலசந்தர், படங்கள் வெளியான மூன்று மாதத்திற்குள் படத்தின் வி.சி.டி. உரிமையை விற்றால் திருட்டு வி.சி.டி. தொந்தரவிலிருந்து தப்பிக்கலாம் என்றார்.
இது ஒன்றும் புதிய நடைமுறை அல்ல. இந்தியில் எவ்வளவு பெரிய படமென்றாலும் அது நூறு நாட்களை தாண்டுவதற்குள் டி.வி.டி.யாக வெளிவந்து விடும். இதனால் அதன் கலெக்சன் பாதிப்பது இல்லை என்பதுடன் திருட்டு வி.சி.டி.யால் ஏற்படும் இழப்பும் தவிர்க்கப்படுகிறது. இதைதான் பாலசந்தர் முன்மொழிந்தார்.
முன்னணி நடிகர்களின் படங்களை மூன்று வருடம் கழித்தே தொலைக்காட்சியல் திரையிட வேண்டும் என்று சட்டம் இயற்றியவர்களுக்கு இந்த யோசனை எப்படி பிடிக்கும்?
பாலசந்தர் விநியோகஸ்தர்களின் கஷ்டம் தெரியாமல் பேசுகிறார் என புகார் கிளம்பியுள்ளது. ஆனால் பாலசந்தரின் யோசனை நடைமுறைக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.