எட்டு மணி படப்பிடிப்புக்கு பன்னிரெண்டு மணிக்கு வந்து, ஹாய் சொல்கிறவர் பிரகாஷ் ராஜ். பங்சுவாலிட்டி விஷயத்தில் பாலிவுட் ஸ்டார்கள் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும்.
பிரகாஷ் ராஜுக்கு காத்திருந்து அலுத்துப்போன நடிகர்கள் பட்டியலில் கமலும் உண்டு. வசூல்ராஜா எம்பிபிஎஸ் படப்பிடிப்பின் போது கமல் மேக்கப்போடு காத்திருக்க, பல மணி நேரம் கடுக்காய் கொடுத்த பின்பே காட்சி தருவார் பிரகாஷ் ராஜ். லேட்டாக வருவது அவரது பிறவி குணம் என்று பொறுத்து வந்தது திரையுலகம்.
ஆச்சரியம் என்னவென்றால் எஸ்.ஏ. சந்திரசேகரனின் பந்தயம் படத்திற்கு கால் மணி நேரம் கூட யாரையும் காக்க வைக்கவில்லையாம் இவர். படப்பிடிப்பில் கலந்துகொண்ட நாற்பது நாளும் பங்சுவாலிட்டியை கடைபிடித்த ஒரே நபர் பிரகாஷ் ராஜ்தானாம். இந்த உலக அதிசயம் எப்படி நடந்தது?
எஸ்.ஏ.சி.யிடம் விஜயின் கால்ஷீட் கேட்டிருந்தார் பிரகாஷ் ராஜ். அவரது மனம் கோணாமல் நடந்தால்தானே கால்ஷீட் சித்திக்கும்.
பந்தயம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் படத்துக்கு விஜயின் கால்ஷீட் வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார் எஸ்.ஏ.சி. உற்சாகத்தில் இருக்கிறார் மிஸ்டர் பங்சுவாலிட்டி.