எந்திரம் - தி ரோபோ!

வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (20:02 IST)
ரோபோ படப்பிடிப்பு நாளை பிரேசிலில் தொடங்குகிறது. முதலில் பாடல் காட்சியை எடுக்கிறார் ஷங்கர்.

ரோபோ ஆங்கிலப் பெயர். தமிழக அரசு உத்தரவுப்படி ஆங்கிலப் பெயர்களுக்கு வரிச்சலுகை கிடையாது. ரோபோ தயாரிப்பாளர், இயக்குனர் ஷங்கர் மற்றும் ரஜினியை பொறுத்தவரை வரிச்சலுகை இல்லையென்றாலும் பாதகமில்லை. ரோபோ பெயரே இருக்கட்டும் என்பது அவர்கள் விருப்பம். ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள்...?

வரிச்சலுகையின் பயன் மக்களுக்கு கிடைப்பதில்லை. அதனை அனுபவிப்பவர்கள் திரையரங்கு உரிமையாளர்கள். முதலீடோ, வேலையோ செய்யாமல் அனாமத்தாக கஜானாவில் சேரும் சேமிப்பு அது. அதனை எப்படி விட்டுக் கொடுப்பார்கள்? கடைசி நேரத்தில் அவர்கள் பிரச்சனை செய்யக்கூடாது என்பதற்காக பெயர் விஷயத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள்.

ரோபோ என்பதை எந்திரம் என தமிழ்ப்படுத்தியிருக்கிறார் ஷங்கர். சிவாஜிக்கு தி பாஸ் சப்-டைட்டிலாக வைக்கப்பட்டது போல் எந்திரத்துக்கு தி ரோபோ என்பது துணை தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

படம் வளரும்போது எந்திரம் வேறு மாதிரி பெயர் மாறவும் வாய்ப்புள்ளது என்கின்றன ஷங்கர் அலுவலகத்திலிருந்து வரும் தகவல்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்