கெளதமின் இருமொழிப் படம்!

வியாழன், 4 செப்டம்பர் 2008 (20:29 IST)
இளம் இயக்குனர்களை வைத்து படம் இயக்க ஆர்வம் காட்டுகிறது, செளந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ.

ஹாலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ் நிறுவனர் ஆக்கர் ஸ்டுடியோவுடன் இணைந்து தமிழ்ப் படங்களை தயாரிக்க முன்வந்திருப்பது தெரியும். யாரை வைத்துப் படம் தயாரிப்பது என்பதை செளந்தர்யா முடிவு செய்கிறார்.

இவர்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் முதல் படம், வெங்கட்பிரபுவின் கோவா. புதுமுகங்கள் நடிக்கும் கோவாவின் படப்பிடிப்பு முழுக்க கோவா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கிறது.

திறமையான இளம் இயக்குனர்களே இவர்களின் சாய்ஸ். அந்த வகையில் வார்னர், ஆக்கர் கூட்டுத் தயாரிப்பில் படம் பண்ண ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் கெளதம் வாசுதேவ மேனன். வாரணம் ஆயிரம், சென்னையில் ஒரு மழைக்காலம் படங்களுக்குப் பிறகு கெளதம் இயக்கும் படம் மேற்படி நிறுவனங்களுக்காக இருக்கும்.

காதலில் விழுந்தேன் ஹீரோவும், தேவயானியின் தம்பியுமான நகுல் இந்தப் படத்தில் நடிக்கக்கூடும் என்கின்றன செய்திகள். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த அர்விந்த் கிருஷ்ணா இந்தப் படத்தில் மீண்டும் கெளதமுடன் இணைகிறார். இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் படத்தில் தெலுங்கு பதிப்பில் மகேஷ்பாபு நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்