வசூல் மன்னன் அக்ஷய்!
சனி, 16 ஆகஸ்ட் 2008 (18:38 IST)
இந்தியில் அக்ஷய்குமார்- காத்ரீனா கைப் இணைந்து நடித்த படம் 'சிங் ஈஸ்கிங்'. மிகப் பெரிய ஹிட் படமான இது வசூலில் சாதனை புரிந்து வருகிறது. சென்ற எட்டாம் தேதி வெளியான இப்படம் ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட அறுபது கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. இதன் வசூலால் அக்ஷய்குமார் சூப்பர் ஸ்டார் அளவுக்கு பேசப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் இந்தியில் உள்ள சில முக்கிய முன்னணி ஹீரோக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், தென்னாப்ரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்ட்ரேலியா போன்ற உலக நாடுகளில் கூட இப்படம் வசூலில் கொடிகட்டி பறக்கிறது. அயல்நாடுகளின் வரிசையில் வட அமெரிக்காவில் மட்டும் சுமார் நூற்றி இருபது பிரிண்ட்டுகள் போடப்பட்டன.
இப்படத்தின் வசூலைக் கண்டு பாலிவுட்டின் பல தயாரிப்பாளர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். அத்தோடு தங்களுடைய அடுத்தடுத்த படங்களில் அக்ஷய் குமார்- காத்ரீனா கைப் பை ஒப்பந்தம் செய்ய கையில் சூட்கேஸ்களுடன் காத்துக் கொண்டும், போட்டி போட்டுக் கொண்டும் இருக்கின்றனர். இதன் காரணமாக தன் சம்பளத்தை இன்னும் கொஞ்சம் உயர்ந்த திட்டமிட்டிருக்கிறார் அக்ஷய்.