வேலு பிரபாகரனின் பெரியார் வெடி!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (20:37 IST)
எடுக்கும் சினிமாவிலும், செய்யும் செயலிலும் கான்ட்ரவர்ஸியை பரிபூரணமாக கலப்பவர் வேலு பிரபாகரன். இவர் வீசியிருக்கும் பெரியார் வெடி, திராவிட கழகத்திற்குள் தீப்பிடிக்க வைத்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

திராவிட கழகத்தில் இருந்து அங்கு ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளால் அங்கிருந்து விலகி வந்தவர் வேலு பிரபாகரன். நவீன பெரியார் என்ற பெயரில் பெரியால் இந்த காலகட்டத்தில் இருந்தால் என்ன ஆகும் என்ற கற்பனையில் ஒரு படம் தயாரிக்க உள்ளார். இணை தயாரிப்பு பாடலாசிரியர் சினேகன்.

இந்த செய்தியே, பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்க, வேறொரு தகவலையும் வெளியிட்டுள்ளார் வேலு பிரபாகரன். பெரியார் கும்பகோணத்தில் பேசிய கடைசி உரைத் தொகுப்பு தன்னிடம் உள்ளதாகவும், அதுவே கடைசி உரை என்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

நாளை சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, திருமாவளவன், சி. மகேந்திரன், கொளத்தூர் மணி ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் இந்த உரையை வெளியிடுகிறார் வேலு பிரபாகரன். இந்த உரையை பெரியார் வேடமிட்டு வேலு பிரபாகரன் நடித்துக் காட்டும் படக்காட்சியும் இந்நிகழ்ச்சியில் திரையிடப்படுகிறது.

பெரியாரின் ஒவ்வொரு சொத்தும் பெரியார் அறக்கட்டளைக்கே சொந்தம். இந்த உரைத் தொகுப்பும் சட்டப்படி பெரியார் அறக்கட்டளைக்கே உரிமையானது. அதனை வேலு பிரபாகரன் வைத்திருப்பது தவறு என திராவிடர் கழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாளைய நிகழ்ச்சியில் இது போராட்டமாக வெடித்தாலும் வெடிக்கலாம்!

வெப்துனியாவைப் படிக்கவும்