ஆக்கர் தயாரிப்பில் இலியானா!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (20:35 IST)
செளந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவின் தயாரிப்பில் நடிக்கிறார் நடிகை இலியானா.

கேடியில் அறிமுகமான இவர், இன்று கோடியில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை. தமிழ் சினிமா தன்னை புறக்கணித்துவிட்டதாகக் கூறி விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையே புறக்கணித்து வந்தார்.

இந்நிலையில், சுல்தான் தி வாரியர் படத்தின் ரஜினி ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இலியானாவை தேடி வந்தது. கோடி சம்பளத்தில் உறுதியாக இருந்ததால் அந்த வாய்ப்பு விஜயலட்சுமிக்கு கிடைத்தது.

இப்படியொரு நிலைமையில் ஆக்கர் ஸ்டுடியோவின் தயாரிப்பில் நடிக்கிறார் இலியானா என்றால் நம்புவதற்கு கடினமாகத்தானே இருக்கும். ஆனால், நம்புங்கள். படத் தயாரிப்பிலும் கிரஃபிக்ஸ் அனிமேஷனிலும் கவனம் செலுத்தி வந்த ஆக்கர் ஸ்டுடியோ, விளம்பரத் துறையிலும் கால் பதிக்கிறது. ஆக்கர் தயாரிக்கும் முதல் விளம்பரம் டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்றிற்குரியது. இதில் நடிப்பது இலியானா.

வெப்துனியாவைப் படிக்கவும்