முதல்வர் கதை, வசனம் - சிக்குவாரா சுந்தர் சி?

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (16:50 IST)
உளியின் ஓசை அடங்குவதற்குள் அடுத்தப் படத்தின் கதை, வசனத்திற்கு பேனாவை திறக்கிறார் முதல்வர் கருணாநிதி. உடன்பிறப்பே உஷார்...! இதுவும் முதல்வர் முன்னம் ஒருநாள் எழுதிய கதையே.

ஐம்பது வயதிற்கு மேல் இயக்குனர் இளவேனிலுக்கு திசை தெறிந்திருக்கிறது. உளியின் ஓசையை தொடர்ந்து முதல்வர் கதை, வசனத்தில் உருவாகும் புதிய படத்தையும் இவரே இயக்குகிறார். கதை, 1957ல் முதல்வர் எழுதி நாவலாக வெளிவந்த சுருளிமலை.

சாரப்பள்ளம் சாமுண்டி எப்படி உளியின் ஓசை ஆனதோ, அதேபோல் சுருளிமலையும் பிலிமுக்கு மாறுகிறது. சில வேளை சுருளிமலையின் பெயர் மாறலாம்.

படத்தை தயாரிக்கப் போகும் தியாகி, தி. நகர் சீமான். தி. நகர் தெருவெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் சீமான் டுடோரியலின் ஓனர். ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட வரலாறும் உண்டு.

உளியின் ஓசை வரலாற்று கதை. சுருளிமலை காதல் நிறைந்த சமூக கதை. கிராமத்து ஆசிரியரும் அதே கிராமத்துப் பெண்ணும் காதலிக்கும் கதை. சுந்தர் சி-யும், சினேகாவும் நடித்தால் நன்றாக இருக்கும் என இருவருக்கும் தூண்டில் வீசியிருக்கிறார் இளவேனில்.

குத்துப்பாட்டு, கொத்துக்கறி என்று சால்னா கதைகளில் நடித்துவரும் சுந்தர் சி. சமூக படத்திலா? சம்மதிக்கவும் முடியாது. சி.எம். கேட்டால் மறுக்கவும் முடியாது. சுந்தர் சி-யின் இப்போதைய அவஸ்தை, என்ன கொடுமை சார் இது!

வெப்துனியாவைப் படிக்கவும்