கோக், பெப்ஸி வரவால் உள்ளூர் கோல்டு ஸ்பாட், காளிமார்க் அடிவாங்கின. குளிர்பான தொழிலில் ஏற்பட்ட இந்த நசிவு கலையுலகில் ஏற்படுமா? கலங்கிப் போயிருக்கும் உள்ளூர் தயாரிப்பாளர்கள் கலந்தாலோசனையை முடுக்கி விட்டுள்ளனர்.
அட்லாப்ஸ், மோசர் பேர், யு டி.வி. போன்ற வட இந்திய தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் சினிமா தயாரிக்க ஆர்வம் காட்டுகின்றன. திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள், திகட்ட திகட்ட சம்பளம்... இவையே இந்த நிறுவனங்களின் கொள்கை.
திறமையான இயக்குனர்களுக்கு பெரிய தொகை சம்பளமாக பேசி, நான்கு ஐந்து என பேக்கேஜாக படங்களுக்கு ஒப்பந்தம் செய்கின்றன இந்த நிறுவனங்கள். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கூட இவர்கள் அதிக சம்பளம் தருகின்றனர். இதே சம்பளத்தை உள்ளூர் தயாரிப்பாளர்களிடமும் எதிர்பார்ப்பதால் பட்ஜெட் எகிறி, பல தயாரிப்பாளர்கள் படமே தயாரிக்க முடியாத நிலை.
வால்ட் டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ் போன்ற ஹாலிவுட் நிறுவனங்களும் தமிழில் தங்கள் கணக்கை துவங்கி உள்ளன.
இந்த நிறுவனங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராகவில்லை. அதனால் இவற்றின் செயல்பாடுகளை சங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது.
இக்கட்டான இதனை எப்படி எதிர்கொள்வதென தயாரிப்பாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சம்பளத்தை குறைக்கச் சொன்னால், அது பிரச்சனையாகிவிடும் என்பதில் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளனர் தயாரிப்பாளர்கள். அதனால் மாற்று வழிகளை யோசிப்பதாக தெரிவித்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன்.