கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்பு கேட்டதற்கு அவரது ரசிகர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கோவையில் குசேலன் ஓடும் திரையரங்கில் வைத்திருந்த ரஜினியின் பேனர்களை ரசிகர்களே கிழித்து எறிந்ததால் அங்கு பதட்டம் நிலவியது.
ஒகேனக்கல் பிரச்சனையில் வன்முறையாளர்களை உதைக்கணும் என்றார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த கன்னட அமைப்புகள், ரஜினி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை கர்நாடகாவில் குசேலனை திரையிட விடமாட்டோம் என மிரட்டியதோடு போராட்டத்திலும் குதித்தன.
ஹைதராபாத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ரஜினி, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, கன்னடர்களிடமிருந்து பாடம் படித்துக் கொண்டதாகவும் கூறினார். கர்நாடகாவில் பிரச்சனை கிளம்பும் போதெல்லாம் தமிழர்களுக்கு எதிரான வன்முறையை முடுக்கிவிடும் கடைநிலை ரவுடிகள் வட்டாள் நாகராஜ், ரக்சண வேதிகே அமைப்பின் மாநில தலைவர் நாராயண கவுடா இருவரையும் நண்பர்கள் என தனது பேட்டியில் குறிப்பிட்டார் ரஜினி.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அவரது ரசிகர்கள் குசேலன் படம் ஓடும் கோவை அர்ச்சனா திரையரங்கில் வைத்திருந்த பேனர்களை கிழித்தெறிந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ், பேனர்களைக் கிழித்த ரசிகர்களை கைது செய்தது. இதனைத் தொடர்ந்து குசேலன் ஓடும் திரையரங்குகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.