பாலா மீது வழக்கு - கோர்ட் பச்சைக் கொடி!

வியாழன், 31 ஜூலை 2008 (20:43 IST)
'பிதாமகன்' பிரச்சனையில் இயக்குனர் பாலா மீது வழக்கு தொடரலாம் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை ஐகோர்ட்.

பிதாமகனை எவர்கிரீன் பிலிம்ஸ் வி.ஏ. துரை தயாரித்திருந்தார். பாலா சொன்ன பட்ஜெட் நான்கு கோடியே ஐம்பது லட்சம். இதற்குமேல் செலவானால் அதற்கு பாலாதான் பொறுப்பு என்றும், குறிப்பிட்ட கால கெடுவுக்குள் படத்தை முடிக்காத பட்சத்தில், வருடத்திற்கு நான்கு லட்சம் வட்டியுடன் பாலா, துரைக்கு தரவேண்டும். இது பிதாமகன் தொடங்கும் முன் போடப்பட்ட ஒப்பந்தம்.

ஆனால், பாலா படத்துக்கு பட்ஜெட்டை விட, நான்கு கோடி அதிகம் செலவழித்ததோடு ஒருவருடம் அதிகம் எடுத்துக் கொண்டார். இதனால் தனக்கு பாலா 90 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாகத் தரவேண்டும் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் துரை.

காலதாமதமாக தொடரப்பட்ட வழக்கு என்று நீதிபதி இதனை தள்ளுபடி செய்தார். துரை மேல் முறையீடு செய்ததில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், முந்தைய தீர்ப்பை ரத்து செய்ததோடு, வழக்கை தனி நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்