செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் பட்ஜெட் 16 கோடியைத் தாண்டியிருக்கிறது.
கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா நடிக்கும் ஆயிரத்தில் ஒருவனை ட்ரீம் வேலி கார்ப்பரேஷன் ரவீந்திரன் தயாரிக்கிறார். படப்பிடிப்புக்கு கிளம்பபும் முன் செல்வராகவன் சொன்ன பட்ஜெட் 6 கோடி.
கேரளாவில் முதல் ஷெட்யூலை முடித்து வந்து இன்னும் ஏழு கோடி இருநூதால் மட்டுமே படத்தை முடிக்க முடியும் என்றார் செல்வராகவன். இது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பஞ்சாயத்தாகி, இறுதியில் மேலும் ஏழு கோடி கொடுக்க சம்மதித்தார் ரவீந்திரன்.
ஆனால் 13 கோடியிலும் நிற்கவில்லை பட்ஜெட். படத்தை முடிக்க மேலும் மூன்றரை கோடி வேண்டும் என செல்வராகவன் கேட்க, மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கம்... புகார்... பஞ்சாயத்து!
13 கோடி செலவழித்த பின் படத்தை கைவிடவா முடியும்? செல்வராகவன் கேட்ட மூன்றரை கோடி தர சம்மதித்தார் ரவீந்திரன். ஆக, பதினாறரை கோடியாக உயர்ந்துள்ளது ஆயிரத்தில் ஒருவன்.
கார்த்தி நடிக்கும் படத்துக்கு இந்த அளவு மார்க்கெட் வேல்யூ உண்டா என்பது ஒருபுறம் இருக்க, இந்த பட்ஜெட்டிலாவது செல்வராகவன் படத்தை முடிப்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.