மதப் பிரச்சாரம் - நக்மாவுக்கு நோட்டீஸ்!

வியாழன், 24 ஜூலை 2008 (20:06 IST)
இறைவனே இறங்கி வந்தாலும் சிலரை காப்பாற்ற முடியாது. நக்மாவின் நிலைமையும் ஏறக்குறைய இதுதான். ஏசுவை புகழப்போன இடத்தில் 'கேஸி'ல் மாட்டியிருக்கிறார் இந்த முன்னாள் நாயகி.

சரத்குமார், கங்குலி, போஜ்புரி சூப்பர் ஸ்டார் என சென்ற இடமெல்லாம் விக்கெட்டை வீழ்த்திய நக்மாவுக்கு கெட்ட நேரம் மும்பை தாதாக்கள் வடிவத்தில் வந்தது. தாதாக்களுக்கும் நக்மாவுக்கும் தொடர்பு இருப்பதாக உயர்மட்ட விசாரணையே நடந்தது. நடுவில் காங்கிரஸ் கட்சி பிரமுகரின் அரசியல் டீ பார்ட்டியில் கலந்துகொண்டு இந்திய பாலிடிக்ஸை கலகலப்பூட்டினார்.

திடீரென, நான் ஏசுவின் பக்தை என நக்மா ஸ்டண்ட் அடிக்க, உண்மையான பக்தகோடிகளிடையே மிரட்சி. சொன்னதோடு நிற்காமல் சென்ற இடமெல்லாம் ஏசுவின் புகழை பேசினார் நக்மா. தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் நக்மா செய்த பிரச்சாரம் அவருக்கே பூமராங் ஆகியிருக்கிறது.

நக்மாவின் பிரச்சாரம் பிற மதத்தவரை புண்படுத்தும்படி இருக்கிறது என, பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சரியான விளக்கம் கிடைக்காவிடில் வழக்குதான் என மிரட்டவும் செய்துள்ளார் பிரமுகர்.

மனச் சாந்திக்காக ஆன்மிகத்தில் நுழைந்தவரை வழக்கு எனும் சிலுவையில் ஏற்றுவது சரியா?

வெப்துனியாவைப் படிக்கவும்