மீண்டும் தேவா... மீண்டும் கானா. எங்க ராசி நல்ல ராசியில் தேவா போட்டிருக்கும் கானாவை கேட்டால் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.
ஜி.ஆர். கோல்டு நிறுவனம் முரளி, விஷ்வா நடிப்பில் தயாரிக்கும் படம் எங்க ராசி நல்ல ராசி. நண்பர் முன்னேறக்கூடாது என பரஸ்பரம் நினைக்கும் நட்பு முரளி, விஸ்வாவினுடையது. இந்த அபாயகரமான நட்புடன் கிராமத்திலிருந்து சென்னை வருகிறார்கள். இவர்களுக்கு வேலை தருபவர் சுயநலமே உருவான எஸ்.வி. சேகர்.
விஷ்வா, முரளியிடம் காரியம் சாதிப்பதற்காக, என்னுடைய மகன் உனக்குதான் என இருவரிடமும் தனித்னியே ஆசை காட்டுகிறார் எஸ்.வி. சேகர். காரியம் முடிந்ததும் அவர் மகளுக்கு அமெரிக்க மாப்பிள்ளையை பார்க்கிறார். தந்தையின் தகிடுதம் தெரிந்த மகள் ரிதிமா, அடிக்கிறார் ஒரு ட்டுவிஸ்ட். முரளி, விஷ்வா இருவரையும் காதலிப்பதாகவும், இருவரையுமே திருமணம் செய்துகொள்ளப் போவதுமாக அவர் கூற, எஸ்.வி. சேகர் மட்டுமின்றி விஷ்வா, முரளி காதுகளிலும் புகை.
இந்த அதிரி புதிரி கதையை ரவி-ராஜா இணைந்து இயக்குகின்றனர். தேவா இசை.
நீ எனக்கு வேஸ்ட் உங்கக்கா எனக்கு டேஸ்ட் காலையில் உங்கம்மா எனக்கு போட்டுத் தருவா பூஸ்ட்...
இது தேவா போட்ட ஒரு கானா. பொன்னியின் செல்வனின் இந்த வைர வரிகள் சென்சாரிலிருந்து தப்பித்தால், 2008-ன் சிறந்த குத்து இதுதான், சந்தேகமில்லை!