படிக்காதவன் படத்திற்காக வாங்கிய அட்வான்ஸை திருப்பித் தந்துள்ளார் வடிவேலு.
சுராஜின் தலைநகரம் படத்தில் வடிவேலுவின் நாய் சேகர் வேடத்திற்கு சிரிக்காதவர்களே இல்லை. இந்தப் படத்திற்குப் பிறகு சுந்தர் சி-யுடன் நடிப்பதில்லை என்று வடிவேலு முடிவெடுத்தது தனிக்கதை.
சுந்தர் சி-யின் அசிஸ்டெண்டாக இருந்தாலும் வடிவேலு - சுந்தர் சி. ஈகோ மோதலை கணக்கில் கொள்ளாத சுராஜ் தனது அடுத்தப்படம் மருதமலையில் வடிவேலுவை நடிக்க வைத்தார். அதில் வடிவேலு ஏற்று நடித்த சிரிப்பு போலீஸ் வேடம், மருதமலை 100 நாட்களை தாண்ட பேருதவி புரிந்தது.
இதனை மனதில் வைத்துதான் தனது படிக்காதவன் படத்திலும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்தார் சுராஜ். ஆனாலும் படப்பிடிப்பில் இருவருக்குள்ளும் ஈகோ மோதல். கோபத்தை கோணிப்பையில் தூக்கி சுமக்கும் வடிவேலு, சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு ரயிலேற, பிரச்சனை பெரிதானது.
லேட்டஸ்ட் தகவல்படி படிக்காதவன் படத்திற்க வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துள்ளார் வடிவேலு. இப்படி ஒவ்வொருவராக பகைத்துக் கொண்டால் வைகைப் புயல் வீசுவதற்கு இடமே இல்லாமல் போகும்.
அதேநேரம் வடிவேலு எனும் தோப்பில் நடந்து பழக்கப்பட்ட சுராஜ் வரப்பில் எப்படி நடக்கப் போகிறார்? படிக்காதவன் வெளிவந்தால் பதில் கிடைக்கலாம்!