தமிழ்த் திரையுலகை பொறுத்தவரை ரோபோ விரலை மிஞ்சிய வீக்கம். முதலீடு செய்யும் நூறு கோடியை ஆறரை கோடி பேரிடமிருந்து அறுவடை செய்வதென்பது செப்படி வித்தைக்கு சமம். இந்த வித்தைக்கு நடுவில் யாரேனும் வில்லங்கம் செய்தால்... சீட்டுக்கட்டு கோபுரத்தின் கதைதான்!
இந்தப் பின்னணியில்தான் இந்திப் படமான லவ் ஸ்டோரி 2050 படத்தை பார்த்து ரோபோ யூனிட் கலங்கியது. லவ் ஸ்டோரி 2050 படத்தில் பிரதான பாத்திரமாக ரோபோ ஒன்று வருகிறது. பறக்கும் கார்கள், வான் முட்டும் கட்டடங்கள் என மும்பை மாநகரையே கிராஃபிக்ஸில் மாற்றியிருந்தனர்.
ரோபோவும் இயந்திர மனிதன் பற்றிய கதை. ஷங்கர், ஷாருக் கான் முதலான பாலிவுட் காரர்களிடம் சொன்ன கதை, கசிந்து அதிலிருந்து உருவானதே லவ் ஸ்டோரி 2050 என பலரும் பயந்தனர். லவ் ஸ்டோரி 2050 வெற்றி பெற்றால் ரோபோவுக்கு வேறு கதை தேடி வேண்டியிருந்திருக்கும்.
நல்லவேளையாக அந்த ஆபத்திலிருந்த தப்பித்திருக்கிறது ரோபோ. லவ் ஸ்டோரி 2050க்கு இருந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வெகுவாக குறைந்துள்ளது. படமும் எதிர்பார்த்த அளவு இல்லை. தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையை கூட தீண்டாததில் ரோபோ டீமுக்கு ரொம்ப நிம்மதி!