சரோஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஏ.ஆர். ரஹ்மானை நோக்கி கேள்வி ஒன்றை வீசினார் இயக்குனர் அமீர்.
உணர்வு ரீதியான படங்களுக்கு ஏன் நீங்கள் (ஏ.ஆர்.) இசையமைப்பதில்லை?
இன்னொரு உப கேள்வி, பாலசந்தர், பாரதிராஜா போன்ற அனுபவசாலிகளுக்கு மட்டுமே இசையமைக்கிறீர்களே, எங்களைப் போன்றவர்கள் உங்களுக்கு இயக்குனராக தெரியவில்லையா?
முதல் கேள்விக்கு வருவோம். ரஹ்மான் இசையமைத்த தீபா மேத்தாவின் ·பயர், வாட்டர், அமீர் கானின் லகான் போன்ற திரைப்படங்கள் உணர்வு ரீதியிலானவை. சரியாகச் சொன்னால், அமீர் உணர்வு ரீதியிலானவை என்று சுட்டிக்காட்டும் திரைப்படங்களை விட மேலானவை.
இரண்டாவது கேள்வியும் அபத்தமானதே. சில நாட்கள் முன்பு சக்கரக்கட்டி படத்தின் இசை வெளியிடப்பட்டது. படத்துக்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். இயக்குனர் கலாபிரவுக்கு இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஜில்லுனு ஒரு காதல் படமும் அப்பட இயக்குனர் கிருஷ்ணாவுக்கு முதல் படம்.
அமீர் மூன்று படங்கள் இயக்கியிருந்தாலும் பருத்தி வீரன் மட்டுமே விமர்சன ரீதியாக அதிக பாராட்டுக்களை பெற்றது. இந்த ஒரு வெற்றியின் பலத்தில், மணிரத்னம் திரைப்பட விழாக்கள் குறித்து ஏன் சொல்லவில்லை? கமல் ஏன் என் விழாவுக்க வரவில்லை என சகட்டு மேனிக்கு கேள்விகளை விளாசினார். இப்போது ஏ.ஆர். ரஹ்மான் அவரது இலக்காகி இருக்கிறார்.
கேள்வியின் நாயகன் என்று பெயரெடுப்பதைவிட, நல்ல படங்களின் இயக்குனர் என அமீர் பெயர் வாங்குவதே அவரது ரசிகர்களின் விருப்பம். செய்வாரா அமீர்?