மருத்துவர் துணையுடன் ஆடிய மாளவிகா!

சனி, 21 ஜூன் 2008 (13:31 IST)
ஐந்து மாத கர்ப்பமாக இருக்கும் மாளவிகா மருத்துவர் ஸ்பாட்டில் இருக்க அவர் ஆலோசனைப்படி பாடல் காட்சியில் ஆடினார்!

பத்திரிக்கைகளில் பரபரப்பாக்கப்பட்ட இந்தச் செய்தியை படிக்கும் யாருக்கும் மெய் சிலிர்த்திருக்கும். என்னே ஒரு தொழில் பக்தி!

ஆனால் உள்ளே நுழைந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் சின்சியாரிட்டியின் இன்னொரு முகம்.

மாளவிகா ஆடிய படம் கார்த்தீகை. இதில் மாளவிகாவுடன் சமிக்சா வும் நடிக்கிறார். இவர்கள் இருவருடன் ஹீரோ விக்ரமாதித்யா ஆடும் பாடல் காட்சிகளை பாங்காங்கில் எடுத்தனர். மாளவிகாவுடன் ஒன்று. சமிக்சாவுடன் ஒன்று. மாளவிகா, சமிக்சா இருவருடனும் இணைந்து ஒன்று என மொத்தம் மூன்று பாடல்கள்.

இரண்டாவது ஷெட்யூல்டில் மாளவிகா, சமிக்சாவுக்கு தலா ஒரு பாடல். மாளவிகா கர்ப்பமாக இருப்பதால் அவரது பாடலையும் சமிக்சாவுக்கு தாரைவார்க்க முடிவு செய்தார் இயக்குனர். அப்படியானால் படத்தில் சமிக்சாவின் கை ஓங்கிவிடும். அதற்கு விடுவாரா மாளவிகா?

டாக்டரை அழைத்து வந்தாவது நான்தான் ஆடுவேன் என அடம்பிடித்து சாதித்திருக்கிறார். இந்த மர்மம் புரிந்தவர்கள் மாளவிகாவின் சின்சியாரிட்டி பற்றி பேசும்போது மர்ம புன்னகை வீசுகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்