பாதிப்பில் பட்ஜெட் படங்கள்!

வெள்ளி, 20 ஜூன் 2008 (19:52 IST)
ஜூனில் தசாவதாரம். ஜூலையில் குசேலன். மத்தளத்துக்கு நடுவில் மாட்டிய மாதிரி மலங்க மலங்க விழிக்கிறார்கள் பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள்.

தசாவதாரம் சின்னப் படங்களை திரையரங்குகளை விட்டு சுனாமியாக சுருட்டியெறிந்தது. தப்பிப் பிழைத்த குருவி, சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களும் காலைக்காட்சி, நைட் ஷோ என ஒன்றிரண்டு காட்சிகளே ஓடுகின்றன.

சுனாமியின் சீற்றம் தணிந்து ஜூன் இறுதியில் தங்கள் படங்களைத் திரையிடலாம் என காத்திருந்தனர் பட்ஜெட் தயாரிப்பாளர்கள். அவர்களுக்கு இடியாக வந்தது பி. வாசுவின் அறிவிப்பு.

இரண்டு நாட்களுக்கு முன் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பி. வாசு, குசேலன் செப்டம்பரில் வெளியாகும் என்ற செய்தியை மறுத்ததோடு, ஜூலையிலேயே திரைக்கு வந்துவிடும் என்றார். குசேலனுடன் பட்ஜெட் படங்களை ரே¤க்கு விடுவது சூஸைடுக்கு சமம். தவிர, திரையரங்குகளுக்கு எங்கு போவது?

குசேலன் ஜூலை இறுதியில் வெளியாகும். ஜூன் இறுதியில் படங்களை ரிலீஸ் செய்தால் ஒரு மாதம் படத்தை ஓட்டிவிடலாம் என்பது சிலரின் எண்ணம். இந்த ஒரு மாத கணக்கை மனதில் வைத்து அரை டஜன் படங்கள் திரையரங்குகளுக்கு ஆளாய் பறக்கின்றன.

அய்யா வழி, ஆயுதம் செய்வோம், வல்லமை தாராயோ ஆகியவை இவற்றில் சில. ஜூன் 27 வெளியாவதாக இருந்த ஜெயம் கொண்டான் படத்தை தேதி குறிப்பிடாமல் மாற்றி வைத்துள்ளனர்.

மொத்தத்தில் கமல், ரஜினி என்ற மலைகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்டிருக்கின்றன பட்ஜெட் படங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்