ரஜினி படத்தில் ப்ரியாமணி?
செவ்வாய், 17 ஜூன் 2008 (19:57 IST)
இந்நேரம் அந்தரத்தில் மிதந்து கொண்டிருப்பார் ப்ரியாமணி. மூடிக்கிடந்த அதிர்ஷ்டத்தின் கதவுகள் ஒரே நேரத்தில் திறந்தால், மிதக்கவென்ன மறக்கவே செய்யலாம்.
சிறந்த தேசிய நடிகை விருதுக்காக வந்து குவிந்த பாராட்டுக்களில் ஒன்றேயொன்று ப்ரியாமணியைப் பிரகாச மணியாக்கியது. பருத்தி வீரனில் அவரது நடிப்பைப் பாராட்டியும் விருதுக்கு வாழ்த்தும் தெரிவித்து வந்த அந்த டெலிகிராம் ஷங்கருடையது.
ஷங்கரின் ரோபோவில் ஐஸ்வர்யா ராய் கேரக்டரைத் தவிர இன்னொரு நாயகி வேடமும் இருக்கிறதாம். இதில் ஷங்கர், ப்ரியாமணியை நடிக்கவைக்க இருப்பதாகப் பேச்சு. இதுகுறித்துக் கேட்டால், ஷங்கர் சார் இதுபற்றி எதுவும் என்னிடம் கூறவில்லை. அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால்... என்று முடிக்க முடியாமல் புல்லரிக்கிறார்.
இது ஒருபுறமிருக்க மணிரத்னத்தைச் சந்திக்க ப்ரியாமணிக்கு அழைப்பு வந்திருக்கிறது. அவரது புதிய படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிருத்விராஜ் ஆகியோருடன் நடிக்கவே இந்த அழைப்பாம்.
ப்ரியாமணி பறக்கவே செய்யலாம்.