ப்ரியாமணியின் பிறந்தநாள் செய்தி!

வியாழன், 5 ஜூன் 2008 (19:42 IST)
திரிசங்கு சொர்க்கம் என்பார்களே. அப்படியொரு மனநிலையில் இருக்கிறார் ப்ரியாமணி. முன்னணி இளம் ஹீரோக்களிடமிருந்து எந்த வாய்ப்பும் இவருக்கு வருவதில்லை. அதேநேரம் சும்மாவும் இல்லை ப்ரியாமணி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என இரண்டாம் வரிசை ஹீரோக்களுடன் மும்மொழியிலும் அம்மணி பிஸி.

இப்படியொரு திரிசங்கு சூழலில் பிறந்தநாள் கொண்டாடினார் ப்ரியாமணி. இடம், திரக்கதா மலையாளப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட். சுற்றி நின்றவர்கள் ஹேப்பி பர்த்டே சொல்ல, கேக் வெட்டியவர், அவரது ரசிகர்களுக்கு கேக்கை விட இனிப்பான தகவலொன்றை கூறினார்.

த்ரிஷா, நமிதாவைத் தொடர்ந்து ப்ரியாமணியும் ரசிகர் மன்றம் அமைக்க ரசிகர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளாராம். எனக்குப் பிடிக்கலை, ஆனா ரசிகர்களின் அன்புத்தொல்லை தாங்கலை என அனுமதி கொடுத்ததற்கு ஒரு சிணுங்கல் காரணம் உதிர்த்தார் ப்ரியாமணி.

எப்படியோ... பெட்ரோல், டீசல் விலை உயர்வில் திண்டாடும் ஜனங்களுக்கு தன்னாலான உதவியை செய்திருக்கிறார் ப்ரியாமணி. மன்றம் தொடங்கி மகராசியின் புகழ் பரப்புவோம்!

வெப்துனியாவைப் படிக்கவும்