கிளாமர் காட்ட முடிவெடுத்த நடிகை!
செவ்வாய், 3 ஜூன் 2008 (19:58 IST)
'சென்னை- 28' வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை செய்த படம். கங்கை அமரன் மகன் இயக்க, பாடகர் எஸ்.பி.பி. மகன் தயாரிக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதில் அறிமுகமானவர் விஜய லட்சுமி.
'காதல் கோட்டை' படத்தை இயக்கியவரும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெற்றவருமான இயக்குநர் அகத்தியனின் மகள். 'சென்னை- 28' படத்திலேயே இந்தப் பெண் யார் என்று தன் பாந்தமான நடிப்பினால் கேட்க வைத்தவர்.
இதையடுத்து மிஷ்கின் இயக்கிய 'அஞ்சாதே' படத்திலும் அழகாகவும், ஹோம்லியாகவும் நடிக்க இவரின் இமேஜ் மேலும் கூடியது. ஆனால் படமோ, பணங்களோ குவியவில்லை. பாராட்டிய அனைவரும் பாராட்டுகளை மட்டும் கொடுத்தார்களே தவிர படங்களைக் கொடுக்கவில்லை.
தற்போது இவரும் சினேகா ஸ்டைலுக்குள் புகுந்து விட்டார். போர்த்தி... போர்த்தி நடித்தது போதுமடா சாமி என்பது போல தற்போது கிளாமர் ரோல்களிலும் நடிக்கப் போகிறேன் என்று அறிக்கை விட்டு வருகிறார்.
அதெல்லாம் உனக்குச் சரிப்பட்டு வராது என்று தோழிகள், உறவினர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லையாம் விஜயலட்சுமி. அப்படி அறிக்கை விட்டுத்தான் இரண்டு படங்கள் கிடைத்துள்ளது என்று பெருமையடித்துக் கொண்டிருக்கிறாராம்.
எது எப்படியோ, ஒரு குடும்ப பாங்காக நடித்த ஒரு நடிகையை தமிழ் சினிமா புரட்டிப் போட்டுவிட்டது. அப்பா அகத்தியனாவது கொஞ்சம் சொல்லக் கூடாதா?