தென்னிந்திய நடிகர் சங்கம் விரைவில் தமிழ் நடிகர் சங்கம் என பெயர் மாறவுள்ளது!
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என நான்கு மாநில நடிகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனாலும் தமிழ் தவிர பிறமொழி நடிகர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது. தவிர மற்ற மூன்று மாநிலத்திலும் அம்மாநில நடிகர்களுக்கு என்று தனித் தனி சங்கங்களும் உண்டு.
இதனால் தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றுங்கள் என பலரும் கோரி வந்தனர். முக்கியமாக பாரதிராஜா. பெயரை மாற்றும் வரை நடிகர் சங்கத்தில் என் மகன் மனோஜ் உறுப்பினராகமாட்டான் என்று கூறி அதை இன்று வரை செயல்படுத்தி வருகிறார்.
ஒகேனக்கல் உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பிறகு, நடிகர்களின் தமிழ் உணர்வு பீறிடத் தொடங்கியிருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றுவதில் முனைப்பாக உள்ளனர். ஆனால், அதற்கு இடையூறாக சில சட்ட சிக்கல்கள்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் சங்க செயலர் ராதாரவி, சட்ட சிக்கல்கள் இருப்பதால் தமிழ் நடிகர் சங்கம் என பெரிதாக எழுதி அதனருகில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை சிறிதாக எழுதி பயன்படுத்த உள்ளோம் என்றார்.
அதாவது, தமிழ் நடிகர் சங்கம் டைட்டில் என்றால், தென்னிந்திய நடிகர் சங்கம் சப்-டைட்டில். வாழ்க தமிழ் உணர்வு!