சினிமாவின் முக்கியமான புள்ளிகளின் வாரிசுகள் திரைப்படத் துறைக்கு வருவது இன்று நேற்றல்ல காலந்தொட்டு நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறார்கள் என்பதே முக்கியம்.
நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக், எஸ்.ஏ. சந்திரசேகரன் வாரிசு நடிகர் விஜய், கஸ்தூரி ராஜா மகன்கள் தனுஷ், செல்வராகவன், இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜா போன்று வெகு சிலரே வெற்றி பெற்ற வரிசையில் உள்ளனர்.
தற்போது ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா, சூப்பர் ஸ்டாரை வைத்து 'சுல்தான்' என்ற அனிமேஷன் படத்தை சிறப்பான முறையில் இயக்கியுள்ளார். பல்வேறு தொழில்நுட்பங்களுடன் எடுக்கப்பட்ட அப்படத்தைப் பற்றி அனைவரும் பாராட்டிப் பேசினர்.
அதேபோல் நடிகர் கமலின் மகள் ஸ்ருதி இசையார்வம் மிகுந்தவர். சினிமா மீது தீராத காதல் கொண்டவர். அத்தோடு நல்ல நடிகையாக வேண்டும் என்ற ஆசையும் உண்டு. அதன்படி நடிகர் மாதவனோடு ஒரு படத்தில் ஜோடி சேரவுள்ளார்.
இந்த வாரிசு வரிசையில் தற்போது நுழைந்திருப்பவர் நடிகர் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி. தரமான படங்களை உருவாக்க வேண்டும் என்று தனியாத தாகம் கொண்டவர். தன் ஆவலை தன் தந்தை சரத்திடம் சொல்ல, அதற்கான தொழில்நுட்பங்களை வெளிநாட்டில் கற்றுக்கொள், உன் ஆசைக்கு நான் தடையாக இருக்கமாட்டேன் என்று மகளுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்துள்ளார் சரத்குமார். எது எப்படியோ தமிழ் ரசிகர்களை மறக்காமல் தமிழ் சினிமா எடுத்தால் சரிதான்.