கதபறயும்போள் படத்துக்கு விருது!

புதன், 9 ஏப்ரல் 2008 (19:26 IST)
பாசில் இயக்கத்தில் வெளிவந்த மணிசித்ரதாழ், சிறந்த பொழுதுபோக்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. அந்தப் படத்தின் ரீ-மேக்கான சந்திரமுகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தற்போது ரஜினி நடித்துவரும் குசேலன், மலையாள கதபறயும்போள் படத்தின் ரீ-மேக். மணிசித்ரதாழ் போலவே இதற்கும் விருது கிடைத்திருக்கிறது. இது மாநில விருது.

சென்ற வருடத்தின் சிறந்த திரைக்கலைஞர்களுக்கான மாநில விருது பட்டியலை நேற்று கேரள அரசு வெளியிட்டது. பாகிஸ்தான் பிரிவினை பின்னணியில் அமைந்த 'பிரதேசி' படத்தில் நடித்ததற்காக மோகன்லால் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகை மீரா ஜாஸ்மின். படம் மம்முட்டியுடன் இவர் நடித்த ஒரே கடல். சசியின் அடையாளங்கள் சிறந்த படம், சிறந்த இயக்குனர் என இரு விருதுகளை பெற்றுள்ளது.

லட்சுமி கோபால்சாமியும், முரளியும் சிறந்த குணச்சித்திர நடிகை, நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த பாடகல் விஜய் ஜேசுதாஸ். பாடகி ஸ்வேதா. இசையமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன். மக்கள் ஆதரவு பெற்ற ஜனரஞ்சகப் படமாக கதபறயும்போள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் சிறப்பு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்