ரகுவரன் - காற்றில் கரைந்த கலைஞன்!

வியாழன், 20 மார்ச் 2008 (15:30 IST)
நேற்று மாலை கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் ஒரு பிடி சாம்பலானார் ரகுவரன். ரசிகர்களின் நெஞ்சத்தில் நிறைந்த அந்த நெடிய மனிதரை இனி பார்க்க முடியாது. நவரசங்கள் தெறிக்கும் அவரது குரலை கேட்க முடியாது. காற்றில் கலந்த ஓசைபோல் திரையுலகை கண்ணீரில் நனைய விட்டு காற்றோடு கரைந்துவிட்டார் ரகுவரன்.

நடிப்பு ரகுவரனுக்கு இதயத் துடிப்பின் ஸ்வரம். அதனால்தான், மதுவோடும், மன அழுத்தத்தோடும் ஒதுங்கியிருந்த காலங்களிலும் நண்பர்களின் அழைப்புக்கு ஓடோடிச் சென்று நடித்துக் கொடுத்தார். பலருக்கு நடிப்பின் திசைகளை திறந்துவிட்டவர் அவர்.

ரகுவரனின் மறைவுச் செய்தி கேட்டதும் திரையுலகமே திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. விஜயகாந்த், சரத்குமார், சரத்யராஜ், விஜய், விக்ரம், அஜித், சூர்யா, ஜீவா, கார்த்தி, ரமேஷ், நடிகைகள் ரேவதி, குஷ்பு, மனோரமா, இயக்குனர்கள் கே.எஸ். ரவிக்குமார், ரமணா, கே. பாய்ராஜ் மற்றும் தயாரிப்பாளர்கள், ரசிகர்கள்...

தனது அஞ்சலிக் குறிப்பில் ரகுவரனின் இழப்பு கலையுலகுக்கு ஈடுசெய்ய முடியாதது என்று கூறியுள்ளார் சரத்குமார். ரஜினியின் ஆஸ்தான வில்லன் ரகுவரன். இது திரையில், திரைக்கு வெளியே சிறந்த நண்பர்கள். நண்பரின் மறைவுச் செய்தி கேட்டதும் குசேலன் படப்பிடிப்பை ரத்து செய்தார் ரஜினி. அங்கேயே அவருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுயசரிதை எழுத வேண்டும் என்பதும், இசை ஆல்பம் வெளியிட வேண்டும் என்பதும் ரகுவரனின் ஆசை. மரணம் அதனை நிராசையாக்கியிருக்கிறது.

சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்த ரகுவரன், சிரித்துக் கொண்டே பேட்டியளித்தார், "இவ்வளவு நாள் கழிச்சு வந்து பார்க்கிறேன், என்னோட இடம் அப்படியே இருக்கு".

உண்மை! யாரும் நிரப்ப முடியாத அந்த இடம், அப்படியே இருக்கிறது. அந்த மாபெரும் கலைஞனை எதிர்பார்த்தபடி.

வெப்துனியாவைப் படிக்கவும்