ஜார்கண்டில் சர்வதேசத் திரைப்பட விழா!
வியாழன், 13 மார்ச் 2008 (15:08 IST)
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் 13ஆவது சர்வதேசத் திரைப்பட விழா நாளை (14.03.08) துவங்கி வருகிற 26 ஆம் தேதி வரை நடக்கிறது.
டாடா ஸ்டீல் நிறுவனத்திடன் இணைந்து செல்லுலாய்ட் சேப்டர் அமைப்பு நடத்துகிற இந்தத் திரைப்பட விழாவை செக் குடியரசு தூதரகத்தின் பண்பாட்டு ஆலோசகர் கேத்தரினா வெளகோவா துவங்கி வைக்கிறார்.
ஜாம்ஷெட்பூரில் நாளை நடக்கவுள்ள துவக்க விழாவில், புகழ்பெற்ற பெங்காலி நடிகர் பரம்பரட்டா சட்டோபத்யா, திரைப்பட விமர்சகர் சுனேத்ரா கடாக் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்று விழாக் குழுச் செயலர் தேபாஷிஸ் சக்ரவர்த்தி தெரிவித்தார்.
இவ்விழாவில் 6 இந்தியத் திரைப்படங்கள் உள்பட 65 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன என்று கூறிய தேபாஷிஸ் சக்ரவர்த்தி, இதில், மீரா நாயரின் 'நேம்சகே', கெளதம் கோஷின் 'யாத்ரா', சந்தீப் ராயின் 'கைலாசே கேலென்காரி', ஆமிர் கானின் 'தாரே ஜமீம் பார்' ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க இந்தியப் படங்கள் ஆகும் என்றார்.
ஃபிரான்ஸ், நார்வே, ஜெர்மனி, இஸ்ரேல், துருக்கி, நெதர்லாந்து, இத்தாலி, போலந்து, செக், கொலம்பியா, வங்காள தேசம், பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.