விரைவில் காதலிக்க நேரமில்லை ரீ- மேக்!
புதன், 27 பிப்ரவரி 2008 (16:27 IST)
பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரின் எவர்கிரீன் படம் காதலிக்க நேரமில்லை. ரவிச்சந்திரன், முத்துராமன், காஞ்சனா, நாகேஷ், டி.எஸ்.பாலையா நடித்த இப்படத்தின் ரீ-மேக் உரிமையை மனோபாலா வங்கிப் பல மாதங்கள் ஆகிறது.
ரீ-மேக்கை யார் இயக்குவது என்று குழப்பம். இப்போது குழப்பம் நீங்கி தானே இயக்குவது என்று முடிவு செய்துள்ளார் மனோபாலா. அடுத்து நடிகர்கள். ரவிச்சந்திரன், முத்துராமன், காஞ்சனா வேடங்களுக்கு எளிதாக நடிகர்கள் கிடைத்து விடுவார்கள். கஷ்டப்பட்டு நாகேஷூக்கு மாற்றாகவும் ஒரு நடிகரைப் பிடித்து விடலாம். ஆனால் பாலையாவுக்கு?
ரீ-மேக் உரிமையைக் கொடுக்கும் போது இதே கேள்வியை மனோபாலாவிடம் கேட்டிருக்கிறார் ஸ்ரீதர். கேள்விக்கான விடையை இதுவரை மனோபாலா கண்டடையவில்லை. அதேநேரம் வடிவேலு உள்பட பலரிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். படத்தை சிங்கப்பூரில் எடுப்பது எனவும் முடிவு செய்துள்ளார்.
சரியான நடிகர்கள் அமைந்தால் அடுத்த நாளா டேக் ஆஃப் ஆகிவிடும் காதலிக்க நேரமில்லை ரீ-மேக்!