நடிப்பு என்று வந்துவிட்டால் யானையுடனும் மோதுவார் விக்ரம். கந்தசாமியில் இவர் மோதுவது காளையுடன்!
கந்தசாமி என்ன மாதிரி கதை என்று சரியாக சொல்பவர்களுக்கு திருவிளையாடல் அரசன் மாதிரி ஆயிரம் பொற்காசுகள் என அறவித்து விடலாம். தமிழ்நாட்டிலும் படப்பிடிப்பு நடக்கிறது. அதே நேரம் மெக்சிகோவிலும் பல காட்சிகள் எடுக்கிறார்கள். இது தவிர வேறு பல நாடுகளும் சுசி. கணேசனின் பட்டியலில் உள்ளன.
மெக்சிகோவின் காளைச் சண்டை உலகப் பிரசித்தம். இங்கு போல் நூறு பேர் சேர்ந்து ஒரு காளையின் மீது பாய்வதில்லை. ஒரு காளை, ஒரு ஆள். ஒண்டிக்கு ஒண்டி! இந்த விளையாட்டில் ரத்த காயம், உயிரிழப்பு எல்லாம் சகஜம்.
கந்தசாமியில் இந்த காளைச் சண்டை இடம்பெறுகிறது. காளையுடன் மோதுகிறவர் விக்ரம். மெக்சிகோவில் காளைச் சண்டை பயில்வதற்கென்றே பயிற்சி நிலையங்கள் உள்ளன. "விக்ரமும் காளைச் சண்டைக்கு பயிற்சி எடுத்திருக்கிறார்" என்றார் சுசி. கணேசன்.