ஸ்பானிஷ் மொழிப் படத்தில் விக்ரம்!
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (12:37 IST)
இடம் பார்க்கப் போய் படம் வாங்கி வந்திருக்கிறார் சுசி. கணேசன். கந்தசாமி படப்பிடிப்புக்காக கென்யாவில் லொகேஷன் பார்த்திருந்தார் சுசி.கணேசன். அதிபர் தேர்தலையொட்டி அங்கு கலவரம் வெடிக்க, படப்பிடிப்புக்கு வேறு இடம் பார்க்க வேண்டிய சூழ்நிலை.
அப்படி சுசி. கணேசனுடன் படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு, ஹீரோ விக்ரம், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், கலை இயக்குநர் தோட்டா தரணி என ஒரு பெரிய டீம் மெக்சிகோவிற்குச் சென்றது. மெக்சிகோவிற்கான இந்தியத் தூதர், கந்தசாமி டீமை மெக்சிகன் அரசு அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது, கந்தசாமி படத்தின் டிரெய்லரை அரசு அதிகாரிகளுக்குப் போட்டுக் காண்பித்தார் சுசி.கணேசன். அனைவரும் டிரெய்லரை ரசித்துக் கை தட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சில், மெக்சிகன்- இந்தியா கூட்டுத் தயாரிப்பில் ஸ்பானிஷ் மொழியில் படம் எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்தத் தயாரிப்பின் தூதராக தாணு நியமிக்கப்பட்டார். படத்தின் இயக்குநர் சுசி.கணேசன். ஹீரோ விக்ரம். படத்தில் மெக்சிகன் நடிகர் நடிகைகளைப் பயன்படுத்திக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது.
கந்தசாமி முடிந்த பிறகு இந்த ஸ்பானிஷ் மொழி படம் தொடங்விருக்கிறது. ஒரு தமிழர் ஸ்பானிஷ் மொழிப் படத்தில் நடிப்பதும், இயக்குவதும் இதுவே முதல்முறை.