சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்!

வியாழன், 7 பிப்ரவரி 2008 (16:35 IST)
சென்னை நகர வசூலை வைத்து ஒரு படம் வெற்றியா தோல்வியா என ஓரளவு யூகித்துவிடலாம். சமீபத்திய படங்களில் நான்கு கோடிக்குமேல் வசூலித்து முன்னிலையில் இருக்கிறது அஜித்தின் 'பில்லா'.

பொங்கல் படங்களில் பீமாவுக்குதான் முதலிடம். மூன்று வார இறுதியில் சென்னை நகரில் மட்டும் ரூ.2.09 கோடி வசூலித்துள்ளது.

வெளியான நாள் முதல் வார இறுதி கலெக்ஷனில் முன்னணியில் இருந்த பீமாவை இரண்டாமிடத்துக்கு தள்ளியிருக்கிறது வடிவேலுவின் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்'.

படம் சரியில்லை என்று விமர்சகர்கள் சொல்லலாம். கலெக்ஷன் சரியில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் சொல்ல முடியாது. வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களில் அழகப்பன் அள்ளியதுஐ 40 லட்சங்கள்!

வடிவேலு படத்துடன் வெளியான தங்கம் படத்தின் வசூல் மூன்று நாட்களில் வெறும் 5 லட்சங்கள் மட்டுமே! கலெக்ஷனைப் பொறுத்தவரை கவுண்டமணியை விட கணிசமான தூரம் முன்னிலையில் இருக்கிறார் வடிவேலு.

சென்னை பாக்ஸ் ஆஃபிசில் இன்னொரு அதிசயம், கரு. பழனியப்பனின் 'பிரிவோம் சந்திப்போம்'. ஆர்ப்பாட்டமாக விளம்பரப்படுத்தப்படும் காளை, பழனியை விட கரு. பழனியப்பன் படத்தின் வசூல் அமோகம். சென்ற வாரம் மட்டும் 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வசூலித்து பீமாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.

மொத்தமாகப் பார்க்கையில் 2008-ல் வெளியான படங்களின் நிலவரம் பில்லா அளவுக்கு நல்லாயில்லை!

வெப்துனியாவைப் படிக்கவும்