ரஜினி நடிக்கும் 'குசேலன்' மலையாள 'கத பறயும்போள்' படத்தின் ரீ-மேக். இந்தப் படத்தின் திரைக்கதை ஆசிரியரான சீனிவாசனுக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருது கிடைத்துள்ளது!
கேரள ஃபிலிம் கிரிட்டிக்ஸ் அமைப்பு வருடந்தோறும் மலையாள சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கி வருகிறது. 2007 ஆம் ஆண்டிற்கான விருதுப் பட்டியலை அவ்வமைப்பின் நிர்வாகிகள் நேற்று வெளியிட்டனர்.
பாகிஸ்தான் பிரிவினையை மையமாகக் கொண்ட 'பரதேசி' படத்தில் முஸ்லிம் பெரியவராக நடித்த மோகன்லால் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'பரதேசி' மற்றும் 'தனியே' படங்களில் நடித்த லட்சுமி கோபால்சாமிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.
'தனியே' மற்றும் மம்முட்டி நடித்த 'ஒரே கடல்' படங்கள் சிறந்த படத்துக்கான விருதை பகிர்ந்து கொள்கின்றன.
நெடுமுடி வேணுவும், பார்வதியும் சிறந்த துணை நடிகர், நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த இயக்குநராக 'ஒரே கடல்' இயக்குநர் ஷியாம் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
'கத பறயும்போள்' மற்றும் 'அரபிக்கதா' படங்களின் நாயகனும், திரைக்கதை ஆசிரியருமான சீனிவாசனுக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதுடன், நடிப்பிற்கான சிறப்பு விருதும் கிடைத்துள்ளது.
சிறந்த துணை நடிகைக்கான விருது பெற்ற பார்வதி தமிழில் சசியின் 'பூ' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.