ஃபிரான்ஸ் நாட்டின் 4 சிறப்புக்குரிய விருதுகளில் ஒன்று "ஆபிசர் ஆப் தி ஆர்டர் ஆப் ஆர்ட்ஸ் அண்டு லெட்டர்ஸ்' ஆகும். 1957 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த விருது, கலை இலக்கியத் துறையில் சேவை புரிந்து புகழ் ஈட்டியவர்களுக்கு வழங்கப்படுகிறது.
2007 ஆம் ஆண்டிற்கான இந்த விருது, பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானுக்கு வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் நடந்துவரும் ஃபிரான்ஸ் திரைப்பட விழாவின் துவக்க நாளான்று இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் ஜெரோம் போனபான்ட் இந்த விருதை ஷாரூக் கானுக்கு வழங்கினார்.
ஷாரூக்கான் கடந்த 15 ஆண்டுகளாக இந்தி திரைப்படத் துறையில் ஆற்றிவரும் சேவையை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் வெளியான "சக் தே இந்தியா', "ஓம் சாந்தி ஓம்' ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றதற்கு ஷாரூக்கானின் சிறந்த நடிப்பும் காரணமாகும்.
இவரைத் தவிர, பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன், இந்திய நாவல் ஆசிரியை அருந்ததி ராய், பாடகர் டேவிட் போவிட், பாப் டைலான், ஹாலிவுட் நடிகர்கள் ஜார்ஜ் குளூனி, லியானார்டோ டி காப்ரியோ, கிளின்ட் ஈஸ்ட்வுட் ஆகியோருக்கும் இந்த பிரான்ஸ் விருது வழங்கப்பட்டது.