'குசேலர்' படத்தில் ரஜினிகாந்துக்கு கவுரவ வேடமல்ல : இயக்குனர் பி.வாசு!
வியாழன், 17 ஜனவரி 2008 (10:58 IST)
`குசேலர்' படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு கவுரவ வேடம் அல்ல. முக்கிய வேடத்தில் அவர் நடிக்கிறார் என்று இயக்குனர் பி.வாசு கூறினார்.
`ரோபோ' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதற்கு முன்பாக `குசேலர்' என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படம் மலையாளத்தில் மம்முட்டி-சீனிவாசன் நடித்த `கத பறயும் போல்' என்ற படத்தின் தழுவல் ஆகும். ஏழை நண்பனுக்கும், பணக்கார நண்பனுக்கும் இடையேயான நட்பை சித்தரிக்கும் கதை, இது. மம்முட்டி, `சூப்பர்ஸ்டார்' அந்தஸ்தில் உள்ள நடிகராகவும், சீனிவாசன், சலூன் நடத்தி வரும் பால்ய வயது நண்பராகவும் நடித்து இருந்தார்கள்.
தமிழில் `சூப்பர்ஸ்டார்' கதாபாத்திரத்தில், ரஜினிகாந்த் நடிக்கிறார். சலூன் நடத்தி வரும் ஏழை நண்பராக, பசுபதி நடிக்கிறார். `குசேலர்' படத்தை இயக்குனர் கே.பாலசந்தரின் கவிதாலயம் நிறுவனமும், பிரபல மலையாள தயாரிப்பாளர் ஜி.பி.விஜயகுமாரின் செவன் ஆர்ட்ஸ் பிலிம்சும் இணைந்து தயாரிக்கின்றன.
இது பற்றி அந்த படத்தை இயக்கும் பி.வாசு செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி, `கத பறயும் போல்' படத்தை சென்னையில் பார்த்தேன். படத்தை பார்த்ததுமே, இந்த படத்தை தமிழில் ரஜினிகாந்த் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதினேன். உடனே ரஜினிகாந்திடம் தொடர்புகொண்டு என் விருப்பத்தை சொன்னேன். மறுநாள், அவர் அந்த படத்தை பார்த்தார். படம் அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை என்று சொன்னார்.
படத்தின் கதை, அவரை மிகவும் பாதித்து இருந்தது. அதைத்தொடர்ந்து அவர், `கத பறையும் போல்' படத்தின் தமிழ் பதிப்பில் (ரீமேக்) நடிக்க சம்மதித்தார். ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில், அவர் விரும்பி நடிக்கும் கதாபாத்திரம் இது. இந்த படத்தில் அவர் நடிப்பது, கவுரவ வேடம் அல்ல. முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ் படத்துக்காக, திரைக்கதை மாற்றி அமைக்கப்படுகிறது.
ரஜினியுடன் நடிக்கும் மற்ற நடிகர்-நடிகைகள் நாளை (18ஆம் தேதி) முடிவு செய்யப்படுகிறார்கள். இது, ஒரு (டப்பிங்) மொழிமாற்று படம் என்று முத்திரை குத்திவிடக்கூடாது என்பதற்காகவே, கவிதாலயம், செவன் ஆர்ட்ஸ் பிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. ஒரே நேரத்தில் தமிழ்-தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகிறது என்று இயக்குனர் வாசு கூறினார்.